Tags

திருப்பூர்:வியட்நாம் நாட்டு குழுவினர், தங்கள் நாட்டு ஆடை உற்பத்தி துறையின் முதலீடு செய்ய, திருப்பூர் ஏற்றுமதியாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

வியட்நாம் நாட்டு துவாதேய்ன் ஹியூ புரொவின்ஸ் மாநில துணை தலைவர் நிஜூயென் வான் புவாங் தலைமையில், அம்மாநில தொழில் துறை அதிகாரிகள், ஆடை உற்பத்தி துறையினர் 14 பேர் குழுவினர், நேற்று திருப்பூர் வந்தனர்.

திருப்பூர், அப்பாச்சி நகரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்க அலுவலகத்தில், சங்க தலைவர் ராஜாசண்முகம் தலைமையில், சந்திப்பு கூட்டம் நடந்தது. ஏற்றுமதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், துணை தலைவர் பழனிசாமி, பொருளாளர் மோகன், நிப்ட்--டீ கல்லுாரி தலைவர் முருகானந்தன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஏற்றுமதியாளர் சங்க தலைவர் பேசுகையில், ''நம் நாட்டின் பின்னலாடை நகராக மாறியுள்ளது, திருப்பூர். ஆண்டுக்கு, 25 ஆயிரம் கோடிக்கு ஆடை ஏற்றுமதி வர்த்தகம் நடக்கிறது. திருப்பூர் தொழில் குழுவினர், சமீபத்தில், வியட்நாம் தொழில் கட்டமைப்புகளை பார்வையிட்டு திருப்பினர். வியட்நாமின் சிறந்த தொழில் யுத்திகளை, திருப்பூரில் செயல்படுத்த முயற்சிகள் நடந்துவருகின்றன,'' என்றார்.வியட்நாம் துவாதேய்ன் ஹியூ புரொவின்ஸ் மாநில துணை தலைவர் நிஜூயென் வான் புவாங் பேசியதாவது:வியட்நாமில், ஏராளமான சுற்றுலாதலங்கள் உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும், 40 லட்சம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பிரதானமானதாக உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி, ஒவ்வொரு ஆண்டும், 11 முதல் 13 சதவீதம் வளர்ச்சி பெற்றுவருகிறது.ஆடை உற்பத்தி மூலப்பொருளான நுால், துணி, அதிகளவு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. டிரான்ஸ் பசுபிக் வர்த்தக ஒப்பந்தம்; ஐரோப்பாவுடன் வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

திருப்பூரில், ஆடை உற்பத்தி துறை, வலிமை மிக்கதாக உள்ளது. இத்துறையினர், வியட்நாம் நாட்டில் முதலீடு செய்ய வேண்டும். வியட்நாமிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு, வரியின்றி ஆடை ஏற்றுமதி செய்யமுடியும்.குறைந்த விலையில் நிலம், மின்சாரம் கிடைக்கும்; பயிற்சி பெற்ற திறமையான தொழிலாளர் அதிகம் உள்ளனர். ஐரோப்பாவுடனான விரியில்லா வர்த்தக ஒப்பந்தத்தை முழுமையாக பயன்படுத்துவதற்கு, வியட்நாமுக்கு, நுால், துணி உள்ளிட்ட மூலப்பொருட்கள் அதிகம் தேவைப்படுகின்றன.திருப்பூர் நிறுவனங்கள் வியட்நாமில் முதலீடு செய்யும்பட்சத்தில், சிறப்பான வளர்ச்சி பெறமுடியும். இவ்வாறு அவர் பேசினார்.

Published On : 17-03-2019

Source : Dinamalar

e-max.it: your social media marketing partner