Tags

''ஒரு நாள் உச்சத்தை தொட வேண்டும் என்ற குறிக்கோள், அனைவருக்கும் இருக்க வேண்டும்,'' என, ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் பேசினார்.


மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் சார்பில்
, தொழிலாளருக்கு திறன் பயிற்சி அளிக்கும், 'சமர்த்' திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

திருப்பூரில், இத்திட்டத்தில் பயிற்சி பெற்ற தொழிலாளருக்கு, ஏற்றுமதியாளர் சங்கத்தில் நடந்த நிகழ்ச்சியில், சான்றிதழ் வழங்கப்பட்டது.ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் தலைமை வகித்து, பேசியதாவது :

திருப்பூர் என்றைக்கும், உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் நகரமாக இருக்கிறது. நேற்றைய தொழிலாளர்கள், இன்றைய முதலாளிகளாக உயர்ந்துள்ளனர். ஒவ்வொருவரும், தங்கள் திறமையை வளர்த்து கொள்ள வேண்டும்.

எந்தவொரு தொழிலாக இருந்தாலும், சுய ஒழுக்கம், அர்ப்பணிப்பு, வைராக்கியம் ஆகிய கொள்கையை பின்பற்றினால், 200 சதவீதம் வெற்றி கிடைக்கும். தொழிலில் பல சோதனைகள் வந்தாலும், பயிற்சியின் வாயிலாக, சாதனையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.ஒருநாள் உச்சத்தை தொட வேண்டும் என்ற குறிக்கோள் அனைவருக்கும் இருக்க வேண்டும்.

மற்றவர்களுடன் போட்டி போடாமல், ஒவ்வொருவரும் தங்களது பணித்திறனுடன் போட்டியிட்டு, திறமையை வெளிப்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.முன்னதாக, இணை செயலாளர் செந்தில்குமார் வரவேற்றார்.

தொழிலாளர் பயிற்சி கமிட்டி தலைவர் முருகேஷ், பெண்கள் கமிட்டி தலைவர் சுமிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். திட்ட இயக்குனர் கணேஷ் பாபு, பயிற்சி திட்டம் குறித்து பேசினார்.

Published On : 25-08-2021

 

Source : Dinamalar

e-max.it: your social media marketing partner