Tags

பின்னலாடை உற்பத்திக்காக கொண்டு செல்லும் துணிகளுக்கு ஜெ.ஜெ. படிவம் இணைப்பதில் இருந்து விலக்கு : 

திருப்பூரில் உள்நாட்டு, ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் அதிக அளவில் உள்ளன. இவை 5 சதவீதம் வணிகவரி செலுத்தி, அதில் 4 சதவீதத்தை திரும்ப பெறுகின்றன. பின்னலாடை உற்பத்தியை பொறுத்தவரை, பல்வேறு நிலைகளை கொண்டது.

வரி ஏய்ப்பு, போலி ரசீதை ஒழிக்கும் வகையில் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு துணிகள், ஆடைகளை எடுத்துச்செல்லும் போது, வணிகவரி இணைய தளத்தில் இருந்து ஜெ.ஜெ. படிவம் பெற்று பூர்த்தி செய்ய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. நிட்டிங், டையிங், ரைசிங், காம்பாக்டிங், கட்டிங், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, செக்கிங், அயர்னிங், பேக்கிங் என்று ஒவ்வொரு பணிக்கும் துணிகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு எடுத்துச்செல்ல வேண்டி இருக்கிறது.

ஜெ.ஜெ. படிவம் இணைப்பு

இவ்வாறு செல்லும் போது, ஜெ.ஜெ.படிவம் தயாரித்து கைவசம் வைத்திருக்க வேண்டியுள்ளது. இணையதள வசதி இல்லாத, சிறிய அளவிலான ஜாப் ஒர்க் நிறுவனங்களால் ஜெ.ஜெ. படிவம் பெற்று வழங்க முடிவதில்லை. பணியாளர் இல்லாத இரவு நேரங்களிலும், இப்படிவத்தை பெறமுடியாத நிலை உள்ளது.

இந்த படிவம் இல்லாமல் துணிகளை கொண்டு செல்லும் போது, வாகன தணிக்கையில் ஈடுபடும் அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர். இதனால் ஜெ.ஜெ. படிவத்தை இணைப்பதில் தளர்வு அளிக்க வேண்டும் என்று திருப்பூர் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

துணிகளுக்கு விலக்கு

இந்த நிலையில் வணிக வரித்துறை சார்பில் திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினருடனான ஆலோசனை கூட்டம் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தமிழக வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி தலைமை தாங்கினார். வணிக வரித்துறை கூடுதல் ஆணையர் ரத்தினசாமி, இணை ஆணையர்கள் அனீஷ்சேகர், ரேஷ்மி ஆகியோர் முன்னிலைவகித்தனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் வரவேற்றார். அப்போது, பின்னலாடை துணிகள் வரிவிலக்கு பிரிவில் இருப்பதால், உற்பத்திக்காக பல இடங்களுக்கு கொண்டு செல்லப்படும் துணிகளுக்கு ஜெ.ஜெ. படிவம் இணைப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகள் அனைத்து தொழில்துறையினர் சார்பிலும் முன்வைக்கப்பட்டது.

அமைச்சர் உறுதி

இதற்கு பதிலளித்து அமைச்சர் கே.சி.வீரமணி பேசும் போது, பின்னலாடை உற்பத்திக்காக கொண்டு செல்லும் துணிகளுக்கு ஜெ.ஜெ. படிவம் இணைப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும். அதற்கு பதிலாக கைகளால் எழுதப்பட்ட ரசீது இருந்தால் போதும், ஆடைகளாக கொண்டு செல்லும் போது மட்டும் ஜெ.ஜெ. படிவம் அளித்தால் போதும் என்று உறுதி அளித்தார். அத்துடன், உங்கள் தொழில் வளர்ச்சிக்கு அரசு உறுதுணையாக இருக்கும். அதுபோல், நீங்களும் (தொழில்அதிபர்களும்) வணிக வரிகளை வரி ஏய்ப்பு செய்யாமல் முழுவதும் செலுத்த வேண்டும் என்றார்.

கூட்டத்தில் டீ, சைமா, டீமா, டிப், சிம்கா, டெக்பா, டையிங், சிஸ்மா உள்பட 30–க்கும் மேற்பட்ட பின்னலாடை துறை சார்ந்த சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

e-max.it: your social media marketing partner