Tags

கம்பளி பின்னலாடை உற்பத்தி குறித்த கருத்தரங்கம், நமது திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் 23-03-2018 அன்று  மாலை நடந்தது.

நமது சங்க தலைவர் திரு.ராஜாசண்முகம் தலைமை வகித்தார். ஆஸ்திரேலிய 'வுல் மார்க்' நிறுவனத்தின் வியட்நாம் நாட்டு பிரதிநிதி திரு.ராஜேஷ் பெஹல் கலந்துகொண்டு பேசியதாவது:

கம்பளி இழைகள் இயல்பாகவே, ஈரம் உறிஞ்சும் தன்மை, கறை படியாமை, அதிக இழுவைத்திறன், புற ஊதா கதிர் தடுப்பு தன்மை கொண்டவை. விளையாட்டு ஆடை உற்பத்திக்கு, இந்த நுாலிழைகள் கை கொடுக்கும்.கம்பளியோடு, பாலியெஸ்டர், நைலான் போன்ற இழைகளை கலந்து, ஆடை தயாரிக்க முடியும். கம்பளி இழைகளை கொண்டு, இரண்டு, மூன்று அடுக்குகளுடன், குளிர் பிரதேசங்களில் அணிவதற்கான ஆடைகள் தயாரிக்கப்படுகிறது. இவ்வகை ஆடை, நுாறு டாலர் வரை விற்கப்படுகிறது.

இந்தியாவில் சில வடமாநில நுாற்பாலைகள், கம்பளி நுாலிழை உற்பத்தி செய்து, சந்தைப்படுத்தகின்றன. பருத்தி நுாலிழையுடன் கம்பளி கலந்து ஆடை தயாரிப்பது சற்று சிக்கலானது. இருப்பினும், குறைந்தளவு பருத்தி இழையுடன் கலந்து, ஆடை தயாரிக்கலாம். கம்பளி பின்னலாடைகளுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. 'நிக்' 'அடிடாஸ்' போன்ற பிரபல நிறுவனங்களிடமிருந்து, அதிகளவு வர்த்தக வாய்ப்புகள் பெறமுடியும். ஏற்றுமதி துறையினர், லட்சியத்தை எட்டுவதற்கு, கம்பளி பின்னலாடை உற்பத்தி கைகொடுக்கும். இவ்வாறு, அவர் பேசினார்.

e-max.it: your social media marketing partner