இந்திய துணி உற்பத்தியாளர் சங்கத்தினர், வரும் ஆண்டுகளில், திருப்பூரில், 'பேப் -2025' கண்காட்சி நடத்த முன்வர வேண்டுமென, ஏற்றுமதியாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்கம் (சி.எம்.ஏ.ஐ.,) சார்பில், மும்பையில், 'பேப் -2025' கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. கடந்த, 21ம் தேதி துவங்கிய கண்காட்சியில், புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'பேப்ரிக்' ரகங்கள், ஆடை உற்பத்திக்கான உப பொருட்கள் காட்சிப்படுத்தியுள்ளனர்.
மும்பை அளவில் நடந்து கொண்டிருந்த கண்காட்சி, முதன்முதலாக தேசிய அளவிலான கண்காட்சியாக மாறியுள்ளது. கண்காட்சி திறப்பு விழாவில், மகாராஹ்டிரா ஜவுளித்துறை அமைச்சர் சஞ்சய், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியம் மற்றும் இந்திய துணி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், கண்காட்சியை துவக்கி வைத்தனர்.
நவீன 'பேப்ரிக்' அறிமுகம் என்பது, செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இதன்காரணமாக, திருப்பூரின் முன்னிலை ஏற்றுமதியாளர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.
தொழில்நுட்ப ஆலோசனை கருத்தரங்கில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் தலைமையில், பொது செயலாளர் திருக்குமரன், இந்திய துணி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சந்தோஷ் கட்டாரியா, துணை தலைவர்கள் ரோகித் முஞசல் மற்றும் அன்கூர் காடியா, பொது செயலாளர் நவீன் ைஷனானி உள்ளிட்டோர் பேசினர்.
இதுகுறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன் பேசியதாவது:
முதன்முதலாக, விரிவாக நடக்கும் 'பேப் -2025' கண்காட்சி, வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஆயத்த ஆடை மற்றும் ஜவுளித்துறை நேரடியாக பயனடையும் வகையில், கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு, முதன்முதலாக கண்காட்சியை பார்வையிட்டு வருகிறோம்.
அடுத்த ஆண்டு நடக்கும் கண்காட்சியில், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அதிக அளவு பங்கேற்க வாய்ப்புள்ளது. நாட்டின், மொத்த பின்னலாடை உற்பத்தியில், 54 சதவீதம் திருப்பூரில் உற்பத்தியாகிறது. ஏற்றுமதி வர்த்தகம், 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கும், உள்நாட்டு வர்த்தகம், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் நடந்து வருகிறது.
திருப்பூரின் ஒட்டுமொத்த மின்தேவை, 750 மெகாவாட்; காற்றாலை மூலமாக, 1,600 மெகாவாட்டும், ேசாலார் மூலமாக, 350 மெகாவாட்டும் உற்பத்தி செய்கிறோம். இந்திய துணி உற்பத்தியாளர்கள், திருப்பூருக்கு வந்து, தொழில் வாய்ப்புகளை பரஸ்பரம் பகிர்ந்துகொள்ள வேண்டும். குறிப்பாக, வரும் ஆண்டுகளில், திருப்பூரில், 'பேப் -2025' கண்காட்சி நடத்த முன்வர வேண்டும்.
Published on: 23rd April 2025
Source: Dinamalar